தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு நன்றி: கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கிய எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த்!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 13,358 வாக்குகள் பெற்று அசோக் ஆனந்த் அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியை முன்னிட்டு தொகுதி மக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மகாத்மா நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் சார்பில் சிறப்புப் பிரார்த்தனை மற்றும் வழிபாட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழிபாட்டு நிகழ்வில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார். பின்னர், தனக்கு பேராதரவு அளித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நேரில் இனிப்புகளை வழங்கி தனது மனமார்ந்த நன்றியினையும் மகிழ்ச்சியினையும் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வின்போது வாக்காளர்களிடையே உரையாடிய அவர், தொகுதி மக்களின் பேராதரவுக்கும் அன்பிற்கும் தாம் எப்போதும் கடமைப்பட்டிருப்பதாகவும், தட்டாஞ்சாவடி தொகுதியின் வளர்ச்சிக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எப்போதும் மக்கள் பணியில் முன்னின்று உழைப்பேன் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.


