புதுச்சேரியில் கு.அ.தமிழ்மொழியின் சிறார் அறிவியல் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா

புதுச்சேரி:
புதுச்சேரியில் எழுத்தாளர் கு.அ.தமிழ்மொழி எழுதிய ‘பேரரசர் இராசராச சோழனின் கொள்ளுப் பெயரன் ஐசக் நியூட்டன்’ என்ற தலைப்பிலான சிறார் அறிவியல் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுவை சீனு.தமிழ்மணி தலைமை தாங்கி நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வெட்டு ஆய்வறிஞர் வில்லியனூர் புலவர் ந. வேங்கடேசன், புதிய நூலை முறைப்படி வெளியிட, அதன் முதல் பிரதிகளை இராதே அறக்கட்டளை பொறிஞர் தேவதாசு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் மற்றும் மகளிர் ஓசை தாமோதரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், மேனாள் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நற்றமிழ்வாணர் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ கலந்து கொண்டு நூலாய்வு உரை நிகழ்த்தினார். அப்போது, சிறார்களிடையே அறிவியல் சிந்தனைகளையும் தமிழ் வரலாற்றின் பெருமைகளையும் எளிமையாகவும் சுவாரசியமாகவும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளதாக அவர் பாராட்டிப் பேசினார்.
இலக்கிய ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நூல் வெளியீட்டு விழாவின் நிகழ்வுகளை கு.அ.அறிவாளன் புகைப்படப் பதிவு செய்தார். இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறார் அறிவியல் கதைகள் இளைய தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கத்தையும் அறிவியல் ஆர்வத்தையும் தூண்டும் என விழாவில் பங்கேற்றவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
