தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் பணிகள்: பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஜெகத்ரட்சகன் எம்.பி., இரா.சிவா தீவிர ஆலோசனை!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக வேட்பாளர் கு. சேது (எ) சேது செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பு பணிகள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பொறுப்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., மற்றும் மாநில அமைப்பாளர் இரா. சிவா ஆகியோர் தலைமையில் தீவிரமாக நடைபெற்றது.
முன்னதாக, தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட லட்சுமி நகர், வேலன் நகர், சின்னையன்பேட், ஜெயராம் நகர், வினோபா நகர் மற்றும் ஆனந்தரங்கப்பிள்ளை நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் மருத்துவர் பொன். கௌதமசிகாமணி, மத்திய மாவட்டச் செயலாளர் மருத்துவர் ஆ. இலட்சுமணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தனியார் விடுதியில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் இரா. சிவா ஆகியோர் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக, தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முழு வீச்சில் மேற்கொள்வது, வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்களை அணுகி உதயசூரியன் சின்னத்திற்கான வாக்குகளை முழுமையாகப் பெறுவது மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளைத் தீர்ப்பதற்கான உறுதியளிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. செந்தில்குமார், அ. செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், வானூர் சட்டமன்ற உறுப்பினர் கௌதம் திராவிடமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, எல். சம்பத், நந்தா. டி. சரவணன், தொகுதி பொறுப்பாளர் டாக்டர் ரோ. நித்திஷ், பொதுக்குழு உறுப்பினர் ந. தங்கவேலு, வேட்பாளர் கு. சேது (எ) சேது செல்வம், சைதை மோகன் மற்றும் தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், கோ. தியாகராஜன் உள்ளிட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


