விசிக தலைமை அலுவலகக் கட்டிடப் பணிக்கு பழங்குடியினர் விடுதலை இயக்கம் சார்பில் ரூ.50,000 நிதியுதவி

புதுச்சேரி: புதுச்சேரியில் அமையவுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய தலைமை அலுவலகக் கட்டிடப் பணிகளுக்காக, பழங்குடியினர் விடுதலை இயக்கம் சார்பில் ரூ.50,000 நிதியுதவி நேரில் வழங்கப்பட்டது.
புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையிலும், கட்சியின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்கும் வகையிலும் தலைமை அலுவலகம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இக்கட்டிடப் பணிகளுக்குப் பல்வேறு அமைப்புகளும் கட்சித் தோழர்களும் தங்களது பங்களிப்பை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலச் செயலாளர் தோழர் ஏகாம்பரம் தலைமையில், அந்த இயக்கத்தின் தோழர்களின் நிதிப் பங்களிப்புடன் திரட்டப்பட்ட ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்த நிதியை புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் அரிமா தமிழன் அவர்களிடம் முறைப்படி வழங்கினர்.
இந்நிகழ்வின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலாளர் தமிழ்மாறன், மாநிலப் பொருளாளர் ரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் பலர் உடனிருந்தனர்.
கட்சியின் தலைமை அலுவலகக் கட்டிடப் பணிக்குத் தங்களது பங்களிப்பை வழங்கியதன் மூலம் அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைப் போராட்டங்களுக்காகத் தொடர்ந்து உறுதுணையாக நின்று களப்பணியாற்றவும் இந்நிகழ்வில் உறுதி ஏற்கப்பட்டது.


