தமிழ்நாடு

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வது குற்றமாகும்: சென்னை காவல்துறை கடும் எச்சரிக்கை!

சென்னை: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் அல்லது வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வது சட்டப்படி குற்றமாகும் என்றும், மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெருநகர சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அறிவிப்பில், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மிக முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான வழக்கு ஒன்றை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட சிறுமியின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வருவது காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்சோ சட்டம் 2012, பிரிவு 23(2)-ன் படி பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளம், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பொதுவெளியில் வெளியிடுவது மற்றும் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, பொதுமக்களும் சமூக வலைதள பயனாளர்களும் இத்தகைய பதிவுகளை இணையத்தில் பகிரவோ, பரப்பவோ வேண்டாம் என்று காவல்துறை திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக யாரிடமாவது ஏதேனும் ஆதாரங்களோ அல்லது முக்கிய தகவல்களோ இருந்தால், அவற்றை சமூக வலைதளங்களில் பரப்பாமல் நேரடியாக சென்னை பெருநகர காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சட்ட விதிகளை மீறி சிறுமியின் அடையாளத்தை வெளியிடுபவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டரீதியான நடவடிக்கை பாயும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன