சென்னையில் பிரம்மாண்ட ராக்கெட் ஏவுதல் நிகழ்வு: முதல்வர் ரங்கசாமியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கல்!

புதுச்சேரி: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட ராக்கெட் ஏவுதல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மார்ட்டின் குரூப் (Martin Group), ஸ்பேஸ் ஜோன் இந்தியா (Space Zone India) மற்றும் குளோபல் ஹெல்ப் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த ராக்கெட் ஏவுதல் நிகழ்வு, வரும் அக்டோபர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 20,000 மாணவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், புதுச்சேரியிலிருந்து மட்டும் சுமார் 2,500 மாணவ-மாணவிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமியை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது ஸ்பேஸ் ஜோன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆனந்த் மேகலிங்கம், லட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாக பொதுச்செயலாளர் ராம்குமார், பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி மற்றும் வழக்கறிஞர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


