புதுச்சேரி: வழியில் தவறவிட்ட 7.5 சவரன் நகை, ரொக்கம் – 24 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீஸ்!
புதுச்சேரி: புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியில் வழியில் தவறவிடப்பட்ட ஏழரை சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தை, சிசிடிவி காட்சிகள் மூலம் துரிதமாக தேடி 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
வானரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (67). இவர் வீடு கட்டுவதற்காக பணம் தேவைப்பட்ட நிலையில், தனது 7.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.7,000 ரொக்கப் பணத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வங்கிக்குச் சென்றார். வங்கிக்குச் சென்று பார்த்தபோது, நகை மற்றும் பணம் வைத்திருந்த பை காணாமல் போனது தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார், அப்பகுதியில் உள்ள சாலையோர சிசிடிவி (CCTV) காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கடக்கும்போது சத்யாவின் கையில் பை இல்லாமல் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில், ஒரு பெட்டிக்கடை அருகே அந்தப் பை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பையிலிருந்த நகை மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை சரிபார்த்த போலீசார், அவற்றை உரிய முறையில் சத்யாவிடம் ஒப்படைத்தனர். நகை காணாமல் போன 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு மீட்டுக் கொடுத்த காவல்துறையினருக்கு அவர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

