புதுச்சேரியில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மாத உதவித்தொகையுடன் கூடிய இலவச கணினி பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு!
புதுச்சேரி, செப். 17:
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி தேசிய தொழில் சேவை மையம் (National Career Service Centre for SC/STs) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) மாணவ-மாணவிகளுக்கு மாத உதவித்தொகையுடன் கூடிய இலவச தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சி திட்டத்தின் கீழ், ஓர் ஆண்டு கால அளவிலான ‘ஆபீஸ் ஆட்டோமேஷன் அக்கவுண்டிங் மற்றும் பப்ளிஷிங் அசிஸ்டென்ட்’, ‘கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிசினஸ் அக்கவுண்டிங்’ மற்றும் ‘சைபர் செக்யூர்டு வெப் டெவலப்மென்ட் அசோசியேட்’ ஆகிய மூன்று முக்கிய தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சிகள் வரும் அக்டோபர் 1 முதல் துவங்கப்படவுள்ளன.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 12-ஆம் வகுப்பு (10+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.09.2026 அன்றைய தேதியின்படி வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் அவசியமாகும். இப்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்படுவதோடு, மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகையும் (Stipend) வழங்கப்படும்.
விருப்பமுள்ள தகுதியான நபர்கள், எண். 5, முதல் தளம், 3-வது குறுக்குத் தெரு, நடேசன் நகர், புதுச்சேரி – 605005 என்ற முகவரியில் இயங்கும் தேசிய தொழில் சேவை மையத்தில் நேரில் சென்று திங்கள் முதல் வெள்ளி வரை (காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை) விண்ணப்ப படிவத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல், வங்கி கணக்குப் புத்தக நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 25.09.2026 ஆகும். கூடுதல் விவரங்களுக்கு 8870073622, 9629342446 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
