தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை அறிமுகம் செய்து வைத்தார் ஜெகத்ரட்சகன் எம்.பி.!
புதுச்சேரி:
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, திமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி கூடத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் கு. சேது (எ) சேதுசெல்வத்தை, புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளருமான எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசுகையில், “புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு களமிறங்கிப் போராடவும் தயாராக உள்ளனர். தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக்கூட முதல்வர் ரங்கசாமி வரவில்லை. மாநிலத்தில் போலி மருந்து ஊழல் தலைவிரித்தாடுகிறது; புதிய தொழிற்சாலைகள் எதுவும் வரவில்லை. புதுச்சேரியின் வளர்ச்சி திமுகவால் மட்டுமே சாத்தியம்” என்றார்.
தொடர்ந்து பேசிய மாநில அமைப்பாளர் இரா. சிவா, “மின்கட்டண உயர்வு, குடிநீர் பிரச்சினை, விலைவாசி உயர்வு மற்றும் பாசிக், பாப்ஸ்கோ போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் முடக்கம் என மாநிலம் முழுவதும் மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். மக்கள் பிரச்சினைகளுக்காக இதுவரை 57 முறை சிறை சென்ற உண்மையான களப் போராளியான சேதுசெல்வத்தை வெற்றி பெறச் செய்து ஆட்சியாளர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்று பேசினார். இக்கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

