ஜிப்மரில் மருத்துவக் கல்வி மற்றும் பாடத்திட்ட அமலாக்கப் பயிற்சி: பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை வெளியீடு

புதுச்சேரி, செப். 10:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்வித் துறை மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) மருத்துவக் கல்வித் தொழில்நுட்ப நோடல் மையம் சார்பில் பேராசிரியர்களுக்கான மருத்துவக் கல்வி அடிப்படைப் பயிற்சி (BCME) மற்றும் பாடத்திட்ட அமலாக்க ஆதரவுத் திட்டம் (CISP III) நடைபெற உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இசட். ஜெயபிரகாசரசன் வெளியிட்டுள்ளார்.
இச்சுற்றறிக்கையின்படி, வரும் அக்டோபர் 12 முதல் 14 வரை மூன்று நாட்கள் அடிப்படை மருத்துவக் கல்விப் பயிற்சியும் (BCME), அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் பாடத்திட்ட அமலாக்க ஆதரவுத் திட்டப் பயிற்சியும் (CISP III) ஜிப்மர் வளாகத்தில் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்க விரும்பும் பேராசிரியர்கள் தங்கள் துறைத் தலைவர்கள் (HOD) மூலமாக உரிய படிவத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் புதிய பேராசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே ஒதுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. BCME பயிற்சிக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 5,900 மற்றும் CISP III பயிற்சிக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 3,540 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட கடிதம் கிடைத்த பிறகே ‘SBI Collect’ மூலம் இக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பேராசிரியர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை துறைத் தலைவர் கையொப்பத்துடன் ஸ்கேன் செய்து nttc.jipmer@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.