புதுச்சேரி

போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்: வில்லியனூர் தொகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ. வேண்டுகோள்

புதுச்சேரி முழுவதும் சாலை விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் போக்குவரத்துக் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன கேமராக்கள் மற்றும் சோதனைகள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வில்லியனூர் தொகுதி மக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் ப. ரவிக்குமார் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில், பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மையானது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து சிக்னல்களை முறையாக மதிப்பது, வாகனம் இயக்கும்போது செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, மது அருந்திவிட்டு அசுர வேகத்தில் வாகனம் ஓட்டாமல் இருப்பது ஆகியவை மிக அவசியம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஒருவழிப் பாதையில் தவறான திசையில் செல்வது மற்றும் இருசக்கர வாகனங்களில் மூவர் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநர் உரிமம் மற்றும் தேவையான அனைத்து வாகன ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அபராதத்தைத் தவிர்ப்பதற்காக மட்டுமல்லாமல், நமது உயிரையும் பிறரது உயிரையும் பாதுகாப்பதற்காக அனைவரும் முழு மனதுடன் போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், விபத்தில்லா புதுச்சேரியை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏ. ப. ரவிக்குமார் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன