புதுச்சேரியில் ஆசிரியர் தின விழா: சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி முதல்வர் ரங்கசாமி கவுரவிப்பு!

புதுச்சேரி, செப். 5:
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர் தின விழா கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி பங்கேற்று, கல்வித்துறையில் தன்னலமின்றி சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பாராட்டி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகர் திரு. அன்பழகன், உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் மற்றும் திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. சாய். J. சரவணன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். விழாவில் சிறப்புரையாற்றிய மாண்புமிகு அமைச்சர், மாணவ சமுதாயத்தின் ஒழுக்கம் மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த சேவையைப் போற்றிப் பேசினார்.
தொடர்ந்து, அரசு மற்றும் கல்வித்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்குப் பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
