புதுச்சேரி

சிவப்பு ரேஷன் கார்டுகள் மஞ்சளாக திடீர் மாற்றம்: புதுச்சேரியில் எம்.எல்.ஏ நேரு தலைமையில் பொதுமக்கள் குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநரிடம் புகார்!

புதுச்சேரி, செப். 04:

புதுச்சேரி உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிவப்பு நிற (BPL) ரேஷன் அட்டைகள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மஞ்சள் நிற (APL) அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கும் இலவச அரிசி, நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியங்களை பெறுவதற்கு சிவப்பு நிற குடும்ப அட்டைகளே பிரதான ஆவணமாக உள்ளன. இந்நிலையில், எந்தவொரு கள ஆய்வோ அல்லது முன்னறிவிப்போ வழங்காமல் தங்களின் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை அதிகாரிகள் தன்னிச்சையாக மஞ்சள் நிற அட்டைகளாக மாற்றியதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.நேரு (எ) குப்புசாமியிடம் முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகத்திற்கு திரண்டு சென்று அதன் இயக்குநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, முறைகேடான இந்த கார்டு மாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, தகுதியான ஏழை எளிய குடும்பங்களுக்கு மீண்டும் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர். மனுவைப் பெற்றுக்கொண்ட துறை இயக்குநர், இது தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன