ஹெல்மெட், நம்பர் பிளேட் இன்றி பேரவைக்கு டூவீலரில் வந்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ: ₹1,500 அபராதம் விதித்த புதுச்சேரி போலீஸ்!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஹெல்மெட் அணியாமலும், நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்திலும் வந்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டனுக்கு போக்குவரத்து போலீஸார் ரூ.1,500 அபராதம் விதித்துள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினரான வையாபுரி மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமலும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் பதிவெண் பலகை (நம்பர் பிளேட்) இல்லாமலும் இருந்ததை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸார் கவனித்தனர்.
இதையடுத்து, மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி சட்டப்பேரவை வளாக வாசலிலேயே எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டனுக்கு போக்குவரத்து போலீஸார் ரூ.1,500 அபராதம் விதித்து அதற்கான ரசீதை வழங்கினர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்த இச்சம்பவம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
