உத்தரப் பிரதேசத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 25 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம்; பள்ளிகளுக்கு விடுமுறை!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதி கனமழை மற்றும் பல்வேறு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் காரணமாக, மாநிலத்தில் உள்ள 25 மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் மிக அதிகபட்ச மழைப்பொழிவை பரேலி, ஏட்டா, ஷாஜகான்பூர், பஹ்ரைச் மற்றும் லக்கிம்பூர் கேரி ஆகிய மாவட்டங்கள் பதிவு செய்துள்ளன. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்திற்கு கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மேலும் பலத்த மழை நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


