புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க கலெக்டர் குலோத்துங்கன் அதிரடி உத்தரவு!

புதுச்சேரி, செப். 8:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை உடனடியாக காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொகுதிக்குட்பட்ட பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள், கட்-அவுட்டுகள் வைப்பது தேர்தல் நன்னடத்தை விதிகளின்படியும், புதுவை திறந்தவெளி சட்டம் 2010-ன் படியும் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், அரசியல் கட்சிகள் தங்களது கொடிகள், ஸ்டிக்கர்கள், விளம்பரங்களை பயன்படுத்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் உரிய முன்அனுமதி பெற வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தட்டாஞ்சாவடி தொகுதியில் துப்பாக்கி உரிமம் வைத்துள்ள நபர்கள் அனைவரும் தங்களது துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை சமர்ப்பித்து துப்பாக்கிகளை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதேவேளையில், தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன