அரசியல்

டெல்லி விமான நிலையத்தில் ராகுல் காந்தியுடன் சந்திப்பு: திருமாவளவன், புதுவை எம்.பி. வைத்திலிங்கம் நேரில் ஆலோசனை!

புதுடெல்லி: சென்னையில் நடைபெறவுள்ள ‘மாணவர்களின் குரல்’ சிறப்பு கருத்தரங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகை தந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் புதுடெல்லி விமான நிலையத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடும் முக்கிய நிகழ்வான ‘மாணவர்களின் குரல்’ கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தி தமிழ்நாடு வருகை தந்தார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மிகுந்த தோழமையுடன் அமைந்தது. இச்சந்திப்பின் போது தற்போதைய தேசிய அரசியல் நகர்வுகள் மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு பொதுவிவகாரங்கள் குறித்து தலைவர்கள் சுருக்கமாகக் கலந்துரையாடினர்.

குறிப்பாக, இச்சந்திப்பின் போது புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய புதுவை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான வே. வைத்திலிங்கம் மற்றும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் எம். கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர். புதுச்சேரி மாநிலத்தின் அரசியல் சூழல், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான விவகாரங்கள் மற்றும் களப்பணிகள் குறித்தும் காங்கிரஸ் மற்றும் விசிக தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

மத்தியில் ஆளும் அரசுக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணியின் முக்கியத் தூண்களாகத் திகழும் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் களம் தொடங்கி பல்வேறு மக்கள் நலப் போராட்டங்கள் வரை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தில்லி விமான நிலையத்தில் புதுச்சேரி மூத்த தலைவர்களுடன் தொல். திருமாவளவன், ராகுல் காந்தியைச் சந்தித்தது அரசியல் அரங்கில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன