தமிழ்நாடு

சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: SFI, DYFI மாநில நிர்வாகிகள் அதிரடி கைது!

சென்னை:
தலைநகர் சென்னையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் சைதாப்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் வாக்குத் திருட்டுக்குக் காரணமான மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கண்டித்து, ‘மோடியே திரும்பிப் போ’ என்று கண்டன முழக்கங்களை ஆக்ரோஷமாக எழுப்பினர்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) மாநிலத் தலைவர் சி. மிருதுளா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளையும், அமைப்பினரையும் காவல்துறையினர் பலவந்தமாகக் கைது செய்து காவல் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க சேவை உள்ளிட்ட முக்கியப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ள நிலையில், இந்தத் திடீர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் சைதாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகளின் இந்தத் திடீர் போராட்டத்தைத் தொடர்ந்து, சென்னை நகரின் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன