தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வேட்புமனு தாக்கல்: அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து!

புதுச்சேரி:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திரு. அசோக் ஆனந்த் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறைப்படி வேட்புமனு சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேட்பாளர் அசோக் ஆனந்துக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள், வேட்பாளர் அசோக் ஆனந்துக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய பிரமுகர்கள், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் களம் தற்போது விறுவிறுப்படைந்துள்ளது.

