புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: எல்லைப் பகுதியில் போலீஸ் தீவிர வாகன சோதனை – எஸ்.பி. வம்சி ரெட்டி எச்சரிக்கை!

புதுச்சேரி, செப். 12: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தொகுதி மற்றும் எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகன சோதனையை நேரில் ஆய்வு செய்த வடக்கு பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) வம்சி ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சட்டவிரோதமாகப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தம் உள்ள 37 வாக்குச்சாவடிகளில், 2 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு, எவ்வித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெற சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக 5 கம்பெனி துணை ராணுவப் படையினர் புதுச்சேரிக்கு வரவழைக்கப்படுகின்றனர்.”

“பொதுமக்கள் அல்லது வணிகர்கள் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப் பணம் கொண்டு சென்றால், அதற்குரிய முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாத பணம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். வாக்காளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ ஈடுபட்டால் கடும் சட்ட நடவடிக்கை பாயும். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்” என்றும் எஸ்.பி. வம்சி ரெட்டி எச்சரித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன