புதுச்சேரி கிராமப்புறங்களில் புதிய அரசு மருத்துவமனைகள்: முதல்வர் என்.ரங்கசாமி உறுதி
புதுச்சேரி, ஆக. 16: புதுச்சேரி கிராமப்புறங்களில் புதிய அரசு பொது மருத்துவமனைகள் விரைவில் தொடங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார். சுதந்திர தின விழாவையொட்டி, புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற தியாகிகளுக்கான தேநீர் விருந்து நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக அரசு பொது மருத்துவமனைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் 38 ஏக்கர் பரப்பளவில் அமையும் தொழில்நுட்ப பூங்கா மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கடந்த காலங்களில் 5,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, வரும் காலங்களிலும் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படும். தியாகிகளின் அர்ப்பணிப்பால்தான் இந்த வளர்ச்சி சாத்தியமானது என அவர் குறிப்பிட்டார்.
தியாகிகள் குடும்பத்தினரின் இலவச மனைப்பட்டா கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைந்து நிறைவேற்றப்படும். மேலும், தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை மற்ற மாநிலங்களை விட உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியின் வளர்ச்சியை விரைவுபடுத்த மாநில அந்தஸ்து அவசியம் என்றும், அது மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் ஆ.அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

