விழுப்புரம் அரசூர் வாராகி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற கருட பஞ்சமி திருவிழா

விழுப்புரம், ஆகஸ்ட் 17: விழுப்புரம் மாவட்டம் அரசூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வாராகி அம்மன் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கருட பஞ்சமி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
கருட பஞ்சமியை முன்னிட்டு, வாராகி அம்மனுக்கு பால், பழம், சந்தனம் மற்றும் தயிர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு கருட பஞ்சமி, நாக பஞ்சமி, விஷ்ணுபதி புண்ணிய காலம் மற்றும் சிம்ம சங்கராந்தி ஆகிய சிறப்புகள் ஒரே நாளில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்த நிகழ்வைக் காண விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே கோவிலில் குவிந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழா நடைபெற்ற நாள் முழுவதும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

