திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய புதுச்சேரி திமுக முக்கிய நிர்வாகிகள்!

புதுச்சேரி:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களை, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ., புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் மற்றும் மாநில கழக பொருளாளர் செந்தில் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்பின் போது, புதுச்சேரி மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல், நிர்வாக நிலைமை மற்றும் மக்கள் சந்திக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து கழகத் தலைவரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் திமுகவின் கட்டமைப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பது, மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது மற்றும் மக்கள் பிரச்னைகளுக்காக எதிர்க்கட்சி ஆற்ற வேண்டிய பணிகள் ஆகியவை தொடர்பாக கழகத் தலைவர் பல ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், அமைப்பாளர் இரா. சிவா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கழகத் தலைவரைச் சந்தித்து கள நிலவரங்களை விளக்கியிருப்பது, புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உத்வேகத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



