டெல்லியில் மூவர்ணக் கொடி போராட்டம்: மாணவர் தலைவர்கள் கைதுக்கு எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம்!

மதுரை: டெல்லியில் மூவர்ணக் கொடி ஏந்தி அமைதி வழியில் ஜனநாயகப் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பின் தலைவர்கள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற மூவர்ணக் கொடி ஏந்திய பேரணி மற்றும் போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றமே தடை விதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில், டெல்லி காவல்துறை அத்துமீறிச் செயல்பட்டு போராட்டக்காரர்களைக் கைது செய்துள்ளது. குறிப்பாக சி.ஜே.பி (CJP) தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தலைவர் நேஹா போரா உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களைத் தனியாகவும், இத்தலைவர்களைத் தனித்தனியாகவும் டெல்லி காவல்துறை அழைத்துச் சென்றுள்ளதாகவும், தற்போது வரை அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒன்றிய மோடி தலைமையிலான அரசு தனது காட்டாட்சியின் மூலம் பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கிப் பார்க்க முயல்கிறது என்று காரசாரமாகச் சாடியுள்ளார். மேலும், ஆட்சியாளர்களின் ஒவ்வொரு அடக்குமுறை நடவடிக்கைக்குப் பின்பும் ஜனநாயகத்தைக் காக்க மக்கள் மீண்டும் மீண்டும் போராட முன்வருவது ஆட்சியாளர்களைக் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அடக்குமுறைகளைத் தாண்டி திமிறி எழுந்து போராடுவதே மக்கள் எழுச்சியின் அடிப்படை இலக்கணம் என்று குறிப்பிட்ட அவர், டெல்லி காவல்துறையினரால் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.


