புதுச்சேரி

நெட்டப்பாக்கம் மொளப்பாக்கம் விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக்க முயற்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

புதுச்சேரி: நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கரியமாணிக்கம் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மொளப்பாக்கம் மற்றும் எம்.குச்சிபாளையம் பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டில் இருக்கும் விளையாட்டு மைதானத்தை அழித்து வீட்டு மனைகளாக மாற்றும் வருவாய்த்துறையின் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மொளப்பாக்கம் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், இளைஞர்களின் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானமே அப்பகுதி சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளின் முக்கிய தளமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், உண்மை நிலையை மறைத்து இந்த மைதானத்தில் 31 வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் (W.P. No: 34903/2026), 6 வார காலத்திற்குள் உண்மைத்தன்மையை ஆராய்ந்து சட்டப்படி தீர்வு காண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு நிலுவையில் உள்ள நிலையிலும், கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி காவல்துறையின் துணையோடு வருவாய்த்துறை அதிகாரிகள் மைதானத்தில் அவசர அவசரமாக எல்லைக்கற்களை நட்டுள்ளனர். அருகிலுள்ள ஏரிப்பாக்கம் மற்றும் கரையான்புத்தூர் பகுதிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட மனைப்பட்டா இடங்கள் காலியாக உள்ள நிலையில், பொது பயன்பாட்டில் உள்ள மைதானத்தை ஆக்கிரமிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், பட்டா வழங்கப்பட்ட பெரும்பான்மையான நபர்களுக்கு ஏற்கனவே சொந்த வீடு மற்றும் நிலங்கள் உள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டு விழாக்களில் இளைஞர்கள் போதை போன்ற பழக்கங்களிலிருந்து விடுபட்டு விளையாட்டுகளில் சாதிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும் வலியுறுத்தியுள்ள சூழலில், கிராமத்து மைதானத்தை அழிப்பது அரசின் கொள்கைகளுக்கே முரணானது என சிபிஐ(எம்) சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், மொளப்பாக்கம் அரசு இடைநிலைப்பள்ளிக்கு மைதானம் இல்லாத நிலையில், சிபிஎஸ்இ (CBSE) விதிமுறைகளின்படி இம்மைதானம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இப்பிரச்சினையில் உடனடி தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ். இராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ. பெருமாள், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். சர்வே எண் 131/4-ல் வழங்கப்பட்ட மனைப்பட்டா உத்தரவை உடனடியாக ரத்து செய்து, மைதானத்தை முழுமையாகப் பாதுகாப்பதுடன் தகுதியான ஏழை எளிய பயனாளிகளுக்கு மாற்று இடத்தில் மனை வழங்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன