புதுவைத் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு: உலகத்தமிழ் மாநாடு நடத்த முதலமைச்சர் ஆலோசனை!

புதுச்சேரி: புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள், முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற செயல்பாட்டு அணியின் பொறுப்பாளர்கள், தலைவர் கலைமாமணி வி. முத்து தலைமையில் முதலமைச்சரைச் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது பொருளாளர் கலைமாமணி பொறிஞர் மு. பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் ப. திருநாவுக்கரசு மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆனந்தராசன் ஆகியோர் உடனிருந்தனர்.
தேர்தலில் வெற்றிபெற்ற 11 நிர்வாகிகளும் தனித்தனியாகப் பெற்ற வாக்குகளின் பட்டியலைப் பார்வையிட்டு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். மேலும், சங்கப் பணிகளைத் தொய்வின்றி சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளை அவர் வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு சார்பில் முன்னெடுக்கப்பட உள்ள ‘உலகத்தமிழ் மாநாட்டை’ புதுவைத் தமிழ்ச் சங்கம் அரசுடன் இணைந்து மிகச் சிறப்பாக முன்னின்று நடத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.


