புதுச்சேரியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி-யின் 152-வது பிறந்தநாள் விழா: தமிழ் அறிஞர்கள், அமைப்பினர் மரியாதை!

புதுச்சேரி, செப். 5: இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ‘செக்கிழுத்த செம்மல்’, ‘கப்பலோட்டிய தமிழர்’ என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்தநாள் விழா புதுச்சேரியில் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சாகித்திய அகாதெமி (மத்திய இலக்கியக் கழக) உறுப்பினர் பேராசிரியர் அரங்க முருகையன், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகர் கு. அரசேந்திரன் மற்றும் புதுச்சேரி தமிழர் மரபு மையத்தின் தலைவர் முனைவர் ஆ. ஆனந் ஆகியோர் கலந்துகொண்டு, வ.உ.சி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் நிறுவுநர் சாமிநாதன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி அவர்களின் அரும்பணிகளையும், தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய இலக்கியப் பங்களிப்புகளையும் போற்றி நினைவுகூர்ந்தனர்.