புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நிர்வாக சீர்கேடு?: அரசுக்கு இந்திய தேசிய இளைஞர் முன்னணி கடும் கண்டனம்!
புதுச்சேரி: புதுச்சேரி பொறியியல் கல்லூரி, தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக (PTU) தரம் உயர்த்தப்பட்ட பின்னர் அங்கு நிர்வாகச் சீர்கேடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறி, என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசுக்கு இந்திய தேசிய இளைஞர் முன்னணி (INYF) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேசிய இளைஞர் முன்னணியின் பொதுச்செயலாளர் கே. தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட பின்னர் ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், படிப்பை முடித்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளுக்குப் பட்டச் சான்றிதழ்கள் மற்றும் தற்காலிகச் சான்றிதழ்கள் வழங்குவதில் கடுமையான நிர்வாக தாமதம் நிலவி வருகிறது. ஒரு கல்வி நிறுவனத்தைப் பல்கலைக்கழகமாக மாற்றுவது என்பது வெறும் பெயர்ப்பலகையை மாற்றுவதோடு முடிந்துவிடுவதில்லை; அதற்கேற்ற நிதி ஆதாரம், நிர்வாகத் திறன் மற்றும் மாணவர் சேவைகளை உறுதிசெய்வதும் அரசின் தலையாய கடமையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, படிப்பை முடித்த 700 மாணவ-மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்க அனுமதி கோரப்பட்ட நிலையில், உயர் மட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்ட வெறும் இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே தலைமைச் செயலகம் அனுமதி அளித்ததாக வெளியாகி உள்ள தகவல் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான்றிதழ் பெறுவது தகுதியுள்ள ஒவ்வொரு மாணவரின் அடிப்படை உரிமை ஆகும்; அதற்கு அரசியல் சிபாரிசு தேவைப்படும் நிலை உருவாவது வெட்கக்கேடானது. சான்றிதழ் தாமதத்தால் இளைஞர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் கல்வி அமைச்சர் ஏ. நமச்சிவாயம் ஆகியோர் இப்புகார்களுக்குப் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களின் ஊதிய நிலுவைகளை உடனடியாக வழங்கி மாதந்தோறும் தடையின்றி ஊதியம் கிடைக்கச் செய்வதுடன், தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளிப்படையான முறையில் சான்றிதழ்களை வழங்க வேண்டும் எனவும், 2 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் அரசு வெளிப்படையான ஆவண விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.