புதுச்சேரியில் மதுபானக் கடைகளில் அதிரடி சோதனை: 4 கடைகளில் ஹூக்கா பயன்பாடு கண்டுபிடிப்பு – அதிகாரிகள் எச்சரிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் சுற்றுலா வகை மதுபானக் கடைகளில் கலால் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
நகரின் முக்கிய இடங்களில் உள்ள 7 சுற்றுலா வகை மதுபானக் கடைகளில் (Restobars) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில், 4 மதுபானக் கடைகளில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் விதிகளை மீறி ஹூக்கா (Hookah) கருவிகள் அமைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஹூக்கா உபகரணங்களை அதிகாரிகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர்.
தொடர்ந்து, அந்த ஹூக்கா கருவிகளில் பயன்படுத்தப்படும் புகையிலைப் பொருட்களில் ஏதேனும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அவை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், சுற்றுலா வகை மதுபானக் கடைகளில் ஹூக்கா கருவிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என கலால் துறை திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.
