உப்பளம் மீன் அங்காடியை உடனே திறக்க வேண்டும்: மக்கள் வரிப்பணம் வீணாகக் கூடாது என எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தல்!
புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் புதியதாகக் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாகத் திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கும் நவீன மீன் அங்காடியை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், மக்கள் வரிப்பணம் வீணாகக் கூடாது என்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி உப்பளம் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காகவும், மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் நவீன வசதிகளுடன் கூடிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த போதிலும், இதுவரை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படாமல் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது.
இது தொடர்பாகப் பேசிய எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின், பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு சொத்துக்கள் உரிய நேரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும். இனியும் காலம் தாழ்த்தாமல் உப்பளம் மீன் மார்க்கெட்டை உடனடியாகத் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
