புதுச்சேரி ஜீவானந்தம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு: கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கியது!
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில், இலக்கியப் பேராசான் ஜீவாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
அரசுப் பள்ளி மாணவர்களைக் கல்வியில் மேலும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்குப் பாராட்டும், ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை. சிவக்குமார், பொதுச்செயலாளர் பெ. பாலகங்காதரன், துணைத் தலைவர் ஓவியர் கலைமாமணி கா. முனிசாமி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜெகஜோதி மற்றும் முன்னாள் மாணவர் எஸ். மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
