விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்: புதுச்சேரியில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – காவல்துறை அறிவிப்பு!

புதுச்சேரி, செப். 18: புதுச்சேரியில் நடைபெற உள்ள விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு, நகரில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.\n\nவிநாயகர் சதுர்த்தி விழாவைத் தொடர்ந்து, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வரும் 20.09.2026 அன்று கடலில் கரைக்கப்பட உள்ளன. புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் ஒன்று திரட்டப்படும் சிலைகள், காமராஜர் சாலை, நேரு வீதி, எம்.ஜி. ரோடு, அஜந்தா சந்திப்பு, லோக் நிவாஸ் சந்திப்பு மற்றும் கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. மேலும் முத்தியால்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு பகுதிகளில் இருந்தும் சிலைகள் அண்ணா சாலை வழியாக பட்டாணிக்கடை சந்திப்புக்கு கொண்டுவரப்பட உள்ளன.
இதையொட்டி போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, காலாப்பட்டு பகுதியில் இருந்து முத்தியால்பேட்டை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி சிவாஜி சிலை, கொக்குபார்க், ராஜீவ் காந்தி சதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் நெல்லித்தோப்பு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
இதேபோன்று, நகரின் மையப்பகுதியில் இருந்து காலாப்பட்டு மற்றும் சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி எம்.எம். சாலை, நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சதுக்கம் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லெனின் வீதி சந்திப்பு முதல் பட்டாணிக்கடை சந்திப்பு வரை காமராஜர் சாலையில் மதியம் 2.00 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை அனைத்து வாகனப் போக்குவரத்தும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் மதியம் 3.00 மணி முதல் ஊர்வலம் நேரு வீதிக்குள் நுழையும் வரை போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு, 45 அடி சாலை மற்றும் ஒடியன்சாலை சந்திப்புகளில் வாகனங்கள் திருப்பி விடப்படும். விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் வழித்தடங்களைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (போக்குவரத்து) கேட்டுக்கொண்டுள்ளார்.
