அரசியல்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: பாக்குமுடையான்பேட்டில் திமுக வேட்பாளர் சேதுசெல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் சேதுசெல்வம் தொகுதிக்குட்பட்ட பாக்குமுடையான்பேட் பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா மற்றும் திமுக தேர்தல் பொறுப்பாளர் பொன். கெளதமசிகாமணி ஆகியோர் முன்னிலையில் இந்த தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

முன்னதாக, புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பாளர் இரா. சிவா தலைமையில், தேர்தல் பொறுப்பாளர்களான விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் டாக்டர் இலட்சுமணன் எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் பொன். கெளதமசிகாமணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பாக்குமுடையான்பேட் ஏர்போர்ட் சாலை, வன்னியர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் சேதுசெல்வம் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர ஆதரவு திரட்டினார். அப்போது அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் நித்திஷ் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன