தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 11 வேட்புமனுக்கள் ஏற்பு, 4 மனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
புதுச்சேரி, செப். 18:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. இதில் மொத்தம் பெறப்பட்ட 15 வேட்புமனுக்களில் 11 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், திமுக வேட்பாளர் சேதுசெல்வம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சைகளின் மனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் கூராய்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மனுக்கள் பரிசீலனையின்போது, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தின் மனு மீது காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளின் தரப்பில் பல்வேறு ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. எனினும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் மற்றும் விதிமுறைகளின்படி ஆய்வு செய்து அவரது வேட்புமனு செல்லும் என அறிவித்து ஏற்றுக்கொண்டனர். அதேவேளையில், முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினாலும் மற்றும் மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் உள்ளிட்ட 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் துறை தெரிவித்துள்ளது.



