வலிமையுடன் ஆட்சி தொடர அசோக் ஆனந்த் வெற்றி பெற வேண்டும்: தட்டாஞ்சாவடியில் முதல்வர் ரங்கசாமி அனல் பறக்கும் பிரச்சாரம்!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து, முதல்வர் ந. ரங்கசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார். புதுப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய முதல்வர், தொடர்ந்து வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் ‘ஜக்கு’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சார நிகழ்வில் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
பிரசார வாகனத்தில் பொதுமக்களிடையே உரையாற்றிய முதல்வர் ரங்கசாமி, “மக்களுக்கான நல்வழிக் கூட்டணி ஆட்சி வலிமையுடன் தொடர என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். நமது அரசு தியாகிகளுக்கான உதவித்தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்துதல், முதியோர் மற்றும் மகளிர் உதவித்தொகை, இலவச ரேஷன் அரிசி, மீனவ சமூகத்தினருக்கு இலவச கல்வி, ஏழை எளியோருக்கு இலவச மனைப்பட்டா என எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப் கணிப்பொறி வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர், மத்திய அரசு புதுச்சேரிக்குத் தேவையான நிதியை வாரி வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய தற்காலிக சபாநாயகர் அன்பழகன், முதல்வரின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக விளங்கும் அசோக் ஆனந்தை மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்து மக்களாட்சியைப் பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.


