திருக்கோவிலூர் கனகனந்தலில் 61 அடி உயர பிரம்மாண்ட முருகர் சிலை குடமுழுக்கு விழா விமரிசை!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே உள்ள கனகனந்தல் கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 61 அடி உயர பிரம்மாண்ட முருகர் சிலைக்கு மகா குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த சிறப்புமிக்க விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் மற்றும் வழிபாடுகள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றன. தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, 61 அடி உயர பிரம்மாண்ட முருகர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது.
விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் கனகனந்தல் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


