புதுச்சேரி

புதுச்சேரியில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை குறைக்கக் கூடாது: மாணவர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைக்கக் கூடாது என்றும், அவ்வாறு குறைப்பது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று மதிப்பெண்ணைக் குறைக்க அரசு பரிசீலிப்பது மாணவர் விரோதப் போக்கு என அவ்வமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கம் (PUGATU) கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்து டெட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்கக் கோரியுள்ள சூழலில் மாணவர்கள் கூட்டமைப்பு இந்த எதிர்ப்புக் குரலை எழுப்பியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி கல்வி முறை மாற்றப்பட்டு சிபிஎஸ்இ (CBSE) பாடமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், சிபிஎஸ்இ பாடங்களை நடத்த தகுதியான ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET) தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளதாக அமைப்பின் நிறுவனத் தலைவர் சி.எஸ். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 04/01/2022 நாளிட்ட அரசாணை எண் 31-ன் படி புதுச்சேரி ஆசிரியர்கள் TNTET, APTET, KTET, CTET என ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என நான்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்புகளையும் பயன்படுத்தாமல் தேர்ச்சி பெற முடியாத சூழலில், தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைக்கக் கோருவது ஆசிரியர்களின் தகுதியின்மையை காட்டுவதாக மாணவர்கள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் சிபிஎஸ்இ விதிகளின்படி சிடெட் மட்டுமே செல்லுபடியாகும் நிலையில் மாநில டெட் தேர்வை ஏற்பதும், அதிலும் மதிப்பெண்ணைக் குறைப்பதும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் செயலாகும். எனவே, தமிழகத்தைக் காரணம் காட்டி புதுச்சேரியில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணைக் குறைக்கக் கூடாது என்றும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வித் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்றும் புதுச்சேரி அரசுக்கு மாணவர்கள் கூட்டமைப்பு திட்டவட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன