புதுச்சேரி

புதுச்சேரியில் உளவுத்துறை போலீசார் 8 பேர் கூண்டோடு ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்: காவல்துறை உத்தரவு

புதுச்சேரி, செப். 04: புதுச்சேரி காவல்துறையின் உளவுப்பிரிவில் (Special Branch) பணியாற்றி வந்த 8 போலீசார் அதிரடியாக ஆயுதப்படைக்கு (Armed Reserve) மாற்றப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுக்கு உளவுத்துறை தகவல்கள் மற்றும் கள நிலவரங்கள் உரிய நேரத்தில் சரியான முறையில் வந்து சேரவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு, அரசியல் நகர்வுகள், போராட்டங்கள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே சேகரித்து அரசுக்கும், காவல்துறை உயரதிகாரிகளுக்கும் சமர்ப்பிப்பது உளவுத்துறையின் முக்கிய பணியாகும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உளவுத்துறை சேகரித்து அனுப்பும் தகவல்களில் தொய்வு ஏற்பட்டதாகவும், அரசுக்கு தேவையான முக்கிய தகவல்கள் துல்லியமாக கிடைக்கவில்லை என்றும் அதிகார மட்டத்தில் அதிருப்தி நிலவியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, உளவுத்துறையில் பணியாற்றி வந்த 8 போலீசாரை கூண்டோடு ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து துறை ரீதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இடமாற்ற நடவடிக்கையைத் தொடர்ந்து, புதிதாக காவல் பணியில் இணைந்த திறமையான இளம் போலீசார் உளவுத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென உளவுத்துறை போலீசார் மொத்தமாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன