புதுச்சேரி

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் மாநாட்டில் தகவல்!

புதுச்சேரி, அக். 12:
புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அடுத்த சில ஆண்டுகளில் நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மாநில சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் ‘ரோபோ கனெக்ட்’ என்ற தலைப்பில் அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் மருத்துவக் கலந்தாலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் இந்த மருத்துவ மாநாட்டை முறைப்படி தொடங்கி வைத்தார்.

‘தொழில்நுட்பத்தையும் கடந்து, மருத்துவம் மற்றும் நோயாளிகளின் நல்வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றங்கள்’ என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இம்மாநாட்டில், 30-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ரோபோடிக் அறுவை சிகிச்சை வல்லுநர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த முன்னணி மருத்துவர்களும் திரளாகப் பங்கேற்றனர். நவீன மருத்துவ உலகில் மிகச் சிக்கலான அறுவை சிகிச்சைகளை, ரோபோடிக் தொழில்நுட்பத்தின் துணையுடன் எளிய முறையில் மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், எஸ்.எஸ்.ஐ., மந்தரா, மெரில், ஹ்யூகோ ஆர்.ஏ.எஸ். மற்றும் மேகோ ஸ்ட்ரைக்கர் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன ரோபோடிக் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல அப்போலோ மருத்துவமனை தலைவர் இளங்குமரன் கலியமூர்த்தி சிறப்புரையாற்றுகையில், “நவீன ரோபோடிக் தொழில்நுட்பமும், மருத்துவர்களின் நீண்ட அனுபவமும் இணையும்போது நோயாளிகளுக்கு உயர்தரமான சிகிச்சை சாத்தியமாகிறது. இத்தகைய அறுவை சிகிச்சைகள் அபார துல்லியத்தன்மையையும், முழுமையான கட்டுப்பாட்டையும் மருத்துவர்களுக்கு வழங்குகின்றன. மிகக் குறைந்த ரத்த இழப்பு, குறைவான வலி மற்றும் விரைவாக குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் சூழல் ஆகியவை இதன் முக்கிய நன்மைகளாகும். அப்போலோ மருத்துவக் குழுமத்தில் இதுவரை சிறுநீரகவியல், மகளிர் மருத்துவம், புற்றுநோயியல், இதயவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

தொடர்ந்து பேசிய புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்கனவே ரோபோடிக் அறுவை சிகிச்சை முறைகள் நடைமுறையில் இருந்து வருவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், அடித்தட்டு மக்களுக்கும் இத்தகைய அதிநவீன மருத்துவ பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அடுத்த சில ஆண்டுகளில் ரோபோடிக் அறுவை சிகிச்சை சேவைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அரசிடம் உரிய அனுமதிகள் பெறப்பட்ட பிறகு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன