ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்காக சமூக நீதி அறக்கட்டளை தொடக்கம்: அமைச்சர் வண்ணி அரசு அறிவிப்பு

சென்னை, அக். 12: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முழுமையான சமூக-பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசின் சார்பில் ‘சமூக நீதி அறக்கட்டளை’ (Social Justice Foundation) முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சமூக நீதித் துறை அமைச்சர் திரு. வண்ணி அரசு இவ்வறக்கட்டளையைத் தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து இந்நிறுவனம் ஒரு லாப நோக்கற்ற பொது அறக்கட்டளையாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது சென்னை-5, சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நல இயக்குநரக வளாகத்தில் தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு அரசு, பெருநிறுவனங்கள், கொடையாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைப்பதாகும்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் தனிநபர்கள், தன்னார்வ அமைப்புகளிடமிருந்து நிதி பங்களிப்புகள், பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR Funds), நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துக்களைத் திரட்டி சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையை நிர்வகிக்க சமூக நீதித் துறை செயலாளரைத் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலராகக் (Chairman-cum-Managing Trustee) கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் உறுப்பினர்-செயலராகவும், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)





