புதுச்சேரியில் பாரிஸ் மறைபரப்பு சபையின் 250-வது ஆண்டு விழா: முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு

புதுச்சேரி, ஆக. 24: புதுச்சேரியில் பாரிஸ் மறைபரப்பு சபை வருகையின் 250-வது ஆண்டு நினைவு விழா கொண்டாட்டமானது, காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் உயர்நிலைப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த விழாவில் சபை வருகையின் முக்கியத்துவத்தையும், சமூக பங்களிப்பையும் போற்றும் வகையில் சிறப்பு நூல் ஒன்று வெளியிடப்பட்டது.
விழாவில் புதுச்சேரி தற்காலிக சபாநாயகர் அன்பழகன், தொல். திருமாவளவன், வைத்திலிங்கம் மற்றும் விஷ்ணு பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மறைமாவட்ட பேராயர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்றனர்.
மறைபரப்பு சபையின் 250 ஆண்டுகால சேவைப் பயணத்தை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்த விழாவில், பல்வேறு மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். சபையின் நீண்டகால பங்களிப்புகளைப் பாராட்டியும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் சிறப்புரைகள் ஆற்றப்பட்டன.

