திருக்கனூரில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா: அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட திருக்கனூர் காந்திமதி திருமண மண்டபத்தில், புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாகப் பங்கேற்றனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு சரிவிகித ஊட்டச்சத்து மிக அவசியமானது என்று குறிப்பிட்டார். ஊட்டச்சத்து குறைபாடற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அரசு மேற்கொள்ளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

