நிரந்தர சபாநாயகரை உடனடியாக நியமிக்க வேண்டும்: சட்டப்பேரவை உறுப்பினர் நேரு கோரிக்கை
நேய மக்கள் கழகத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்களில் சாமானியர்கள் வெற்றி பெற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், பணம் படைத்தவர்கள் மட்டுமே வெற்றி பெறும் சூழல் கடந்த தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் காலங்காலமாக தொகுதியில் சேவையாற்றிய கட்சியினரும், பொதுநல அமைப்புகளும், பொதுச் சேவகர்களும் தேர்தலில் தோற்கடிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீன்பிடி சமூகத்துக்கு எதிரான பாதையை உருவாக்கியிருப்பதாகவும் விமர்சித்தார். சட்டப்பேரவை வரலாற்றில் தற்காலிக சபாநாயகர் இவ்வளவு காலம் பொறுப்பில் இருந்தது புதுச்சேரியில் மட்டுமே எனக் கூறிய அவர், நிரந்தர சபாநாயகரை உடனடியாக நியமிக்க வேண்டும் என கோரினார். மேலும் அனைத்து துறைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நகராட்சிக்கு ஆணையர் நியமனம் மற்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.