புதுச்சேரி

மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தீவிர டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்: விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார் டாக்டர் சரண்யா!

புதுச்சேரி, செப். 8: புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையின் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகன இயக்கம் தீவிரமாக நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அய்யங்குட்டிபாளையம், குருமாம்பேட்டை, தர்மபுரி, முத்திரபாளையம், காந்தி திருநல்லூர், வி.பி.சிங் நகர், மாணிக்க செட்டியார் நகர், சொக்கநாதன்பேட், தட்சிணாமூர்த்தி நகர், திலாஸ்பேட், காந்தி நகர், கவுண்டம்பாளையம் மற்றும் திலகர் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் இந்த பிரச்சார வாகனம் மூலம் பொதுமக்களுக்கு நேரடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக, இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகன இயக்கத்தை மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவியாளர்கள், ஏ.என்.எம். செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் கலந்துகொண்டனர்.

பிரச்சார வாகனத்தில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள், ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் வழிமுறைகள் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையைப் பராமரிப்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கிடக்கும் பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பயன்பாடற்ற பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், குடிநீர் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை கொசுக்கள் புகாதவாறு மூடி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் டெங்கு தடுப்பு வழிகாட்டுதல் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன