புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக மாணவர்கள் உயிர் தப்பினர்!
புதுச்சேரி: புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பு பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த பள்ளி மாணவர்கள் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
வழக்கம்போல் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ மரப்பாலம் பிரதான சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்து நடந்த உடனேயே அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் சக வாகன ஓட்டிகள் விரைந்து வந்து ஆட்டோவை நிமிர்த்தி, உள்ளே இருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் மாணவர்களுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
