புதுச்சேரி

காஞ்சி மாமுனிவர் அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் பி.எச்.டி மாணவர் சேர்க்கை: அமைச்சர் நமச்சிவாயம் ஆணை வழங்கினார்!

புதுச்சேரி, செப். 26: புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட (Ph.D) ஆய்வு மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதுச்சேரி உயர்கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 38 ஆராய்ச்சி மாணவர்களுக்குச் சேர்க்கைக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.

இதுவரை புதுவைப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், நடப்பாண்டு முதல் காஞ்சி மாமுனிவர் நிறுவனமே சுயமாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், தாவரவியல், வணிகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொள்ள 96 பேர் விண்ணப்பித்தனர். இதில் தேசியத் தகுதித் தேர்வு (NET) தேர்ச்சி பெற்ற 13 பேருக்கு விலக்கு அளிக்கப்பட்டு, மீதமுள்ள 75 பேருக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு இறுதியாக 38 மாணவர்கள் ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ. நமச்சிவாயம் பேசுகையில், மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, போட்டி நிறைந்த உலகில் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்ட அவர், புதிய கட்டடப் பணிகளைப் பார்வையிட்டு செய்தி மடலையும் வெளியிட்டார். இந்நிகழ்வில் நிறுவன இயக்குநர் முனைவர் சசிகாந்த தாஸ், ஒருங்கிணைப்பாளர் மேரி ஜோசபின் அருணா உள்ளிட்ட பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன