கதிர்காமம் தொகுதியில் நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள்: சட்டமன்ற உறுப்பினர் அழகானந்தம் தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி:
புதுச்சேரி கதிர்காமம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட ராகவேந்திரா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுவதாகவும், இதனால் கழிவுநீர் வழிந்தோடி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். அழகு என்கிற அழகானந்தம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பொதுமக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு உயர் அழுத்த உறிஞ்சும் இயந்திரம் (Drainage Suction Machine) மூலமாகப் பாதாள சாக்கடை மற்றும் வடிகால் அடைப்புகளை முழுமையாக அகற்றி சீரமைக்கும் பணிகள் ராகவேந்திரா நகரில் முறைப்படி தொடங்கப்பட்டன. இப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். அழகானந்தம் நேரில் பார்வையிட்டுத் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர், வரவிருக்கும் பருவமழை காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீரோ அல்லது மழைநீரோ தேங்காமல் சீராக வெளியேறும் வகையிலும், சுகாதார சீர்கேடுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் தொகுதி முழுவதும் தேவையான இடங்களில் வடிகால் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த சீரமைப்பு பணிகளைப் பொதுப்பணித்துறை (PWD) செயற்பொறியாளர் சுந்தரி, உதவிப் பொறியாளர் பாஸ்கர், இளநிலைப் பொறியாளர் மார்ஷல் சகாயநாதன் மற்றும் பணி ஆய்வாளர்கள் ஜெயக்குமார், ராஜன், பாபு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வின் போது ராகவேந்திரா நகர் பகுதி பொதுமக்கள், முக்கியப் பிரமுகர்கள், டிரைனேஜ் துறை அலுவலர்கள் மற்றும் அழகு அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


