புதுச்சேரி

புதுச்சேரி அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையை முற்றுகையிட்ட விசிக: விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு இழப்பீடு கோரி போராட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் அரியூரில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் சிக்கி முதுகுத்தண்டு எலும்பு முறிந்த பெண்ணுக்கு முறையான சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ரெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி என்ற பெண், மருத்துவ முகாமிற்காக நாள் ஒன்றுக்கு ரூ.200 கூலி அடிப்படையில் அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரால் ஏற்பட்ட விபத்தில் சுந்தரி பலத்த காயமடைந்தார். இதில் அவரது முதுகுத்தண்டு எலும்பு முறிந்து படுகாயமடைந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு முழுமையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மங்கலம் தொகுதி மாவட்ட செயலாளர் பாவரசு தலைமையில் விசிகவினர் திரண்டு மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆதவன், மாநில பொருளாளர் மாசி. வாகையரசு, தலைமை நிலைய செயலாளர் எழில்மாறன், மாநில செயலாளர் ஆற்றலரசு, வில்லியனூர் தொகுதி மாவட்ட செயலாளர் அ. தமிழரசன், நெட்டப்பாக்கம் தொகுதி மாவட்ட செயலாளர் ஆதிரை, பாகூர் தொகுதி மாவட்ட செயலாளர் தாயப்பன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன