புதுச்சேரி

புதுச்சேரியில் உல்லாஸ் திட்ட அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு: 4,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

புதுச்சேரி, 27/9/2026: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை முழுமையான எழுத்தறிவு பெற்ற பகுதியாக மாற்றும் உன்னத நோக்கில், மாநில எழுத்தறிவு மையம் சார்பில் ‘உல்லாஸ்’ (ULLAS) திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் நடைபெற்று வரும் இத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள 170 கற்றல் மையங்கள் வாயிலாக 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லாத மற்றும் கல்வி வாய்ப்பை இழந்த நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இம்மையங்களில் தொடர் கல்வி பயின்று வந்தவர்களுக்கான ‘அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு’ அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக நடைபெற்றது. காலை 10:00 மணிக்குத் தொடங்கிய இத்தேர்வு மாலை 5:00 மணி வரை அமைதியான முறையில் நடைபெற்றது. புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கற்றறிந்த முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று தேர்வை எழுதினர்.

ரெட்டியார்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை, உல்லாஸ் திட்டத்தின் நோடல் அதிகாரி சுகுணா சுகிர்தாபாய் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு தேர்வு எழுதியவர்களுக்கான அடிப்படை வசதிகள், வினாத்தாள் விநியோகம் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

இந்த மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெறும் பயனாளிகளுக்குத் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்/பல்கலைக்கழகம் மூலம் அதிகாரப்பூர்வமாக ‘கற்றவர்’ (Literate Certificate) சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழைப் பெறுவதன் மூலம், பயனாளிகள் வங்கிக் கணக்கு தொடங்குதல், அரசின் பல்வேறு சமூகப் பாதுகாப்பு நலத்திட்ட உதவிகளைப் பெறுதல் மற்றும் சுயதொழில் கடன் உள்ளிட்ட பலன்களை எளிதாகப் பெற வழிவகை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன