புதுச்சேரி

பெண் தலைமைக் காவலருக்கு பாலியல் தொல்லை: புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து அரசு அதிரடி!

புதுச்சேரி, செப். 26:

காரைக்கால் பகுதியில் பணியாற்றியபோது பெண் தலைமைக் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஏ. சுப்பிரமணியனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காரைக்கால் பிராந்தியத்தில் காவல் கண்காணிப்பாளராக ஏ. சுப்பிரமணியன் பணியாற்றி வந்த காலகட்டத்தில், அங்கு பணியாற்றிய பெண் தலைமைக் காவலர் ஒருவர் மீது அவர் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தலைமைக் காவலர், காவல் துறையின் உயர் அதிகாரிகளிடம் முறையான புகார் மனுவை அளித்தார்.

காவல் துறையில் பெண் ஊழியர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உள்ளகப் புகார்க் குழு (Internal Complaints Committee – ICC) இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டது. இரு தரப்பிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, புகாரில் உள்ள உண்மைத்தன்மை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

விசாரணையின் முடிவில், பெண் தலைமைக் காவலர் அளித்த பாலியல் அத்துமீறல் புகாரில் ஆரம்பக்கட்ட முகாந்திரமும், உண்மைத்தன்மையும் இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, உள்ளகப் புகார்க் குழு தனது விரிவான விசாரணை அறிக்கையை அரசின் பரிசீலனைக்குச் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்ற அரசு நிர்வாகம், காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியனை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டது. காவல் துறையில் உயர் பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரி மீதே பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியக் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன